கட்சியில் கட்டம் கட்டப்படுவது ஒன்றும் அழகிரிக்குப் புதிதல்ல. 2000-ம் ஆண்டில் சஸ்பெண்டானார். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சஸ்பெண்ட்.
2000-ல் அழகிரி இடைநீக்கம் செய்யப்பட்டபோது அவரிடம் பதவியேதும் இல்லை. ஆனால் உண்மையான நெருக்கமான ஆதரவாளர்கள் வட்டத்தை வைத்திருந்தார். அவரது ஆதரவாளர்கள் அனைவரும் நீக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தார்கள். மதுரையை அதிரிபுதிரி யாக்கினார்கள். அத்தனைக்கும் அப்போது நடந்தது தி.மு.க. ஆட்சி.
தென்மண்டல அமைப்புச் செயலாளர், எம்.பி., மத்திய அமைச்சர் என பதவிகள் அடுக்கடுக்காக அழகிரியை வலம் வர, அவரைச் சுற்றி இருக்கும் கூட்டமும் மாறியது. அவ்வப்போது புதிய கூட்டம் உருவானது. பதவியே இல்லாதபோது இருந்த கூட்டத்துக்கு இந்தக் கூட்டம் இணையானது எனச் சொல்வது சிரமம். அதற்கு ஒரு உதாரணம்..
அழகிரியின் பிறந்தநாள் விழா (30-ம்தேதி) ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த விழா மண்டபமான ராஜாமுத்தையா மன்றத்துக்கு 24-ம் தேதியன்று அவரது ஆதரவாளர்கள் சென்றிருந்த நேரத்தில் தான் அழகிரி சஸ்பெண்ட் செய்தி அவர்களை எட்டியிருக்கிறது. அப்போது அங்கு சென்றிருந்தவர்களில் சிலர் நைசாக கழன்றுவிட்டார்களாம். காரணம், ‘2000-ல் பதவியில்லாத அழகிரியுடன் இருந்தவர்களுக்கு எதிர்பார்ப்பில்லை. ஆனால் இப்போது இருப்பவர்களுக்கு அப்படியல்ல.. தேர்தல் வருகிறது. நாலு காசு பார்க்கணும். அத்தோடு கட்சியில் பொறுப்பில் இருந்தால் தான் ஆளும்கட்சியின் கெடுபிடிகளை எதிர்கொள்ளமுடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அழகிரியால் பதவிபெற்ற பலர் இன்றைக்கு ஸ்டாலின் பக்கம் சென்றுவிட்டார்கள்’ என்கிறார் கட்சியின் சீனியர் ஒருவர்.
கட்சியை விட்டு நீக்கப்படும் போதெல்லாம் ஸ்டாலினை விமர்சிப்பதும் கட்சியில் ஜனநாயகம் செத்துவிட்டதாக ‘டிக்ளேர்’ செய்வதும் அழகிரியின் வாடிக்கை. ‘1996-ல் தனக்கு பதவி தரவில்லை என்பதற்காக தலைவர் முதல்வராகப் பதவியேற்றபோது பதவியேற்பு விழாவையே குடும்பத்தோடு புறக்கணித்தவர் ஸ்டாலின்’ என 2001-ம் ஆண்டு ஸ்டாலினை அழகிரி கடுமையாக விமர்சித் தார். அதன் பிறகு ஸ்டாலினுடன் நெருக்கம் இருப்பதாகக் காண்பித்துக் கொண்டவர் மீண்டும் தற்போது ‘அவர் (ஸ்டாலின்) என்ன சொல்கிறாரோ அதுதான் கட்சியில் நடக்கிறது’ என்கிறார்.
2001 சட்டசபைத் தேர்தலின் போது அழகிரியின் ஆதரவாளர்கள், தி.மு.க. வேட்பாளர்கள் சிலருக்கு எதிராக செயல்பட்டார்கள். அதனால் தான் மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பால்ராஜ், மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சட்டபேரவைத் தலைவராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் ஆகியோர் தோற்றுப்போனார்கள். முன்பு மாவட்டவாரியாக செல் வாக்குள்ள அழகிரி ஆதரவாளர்கள் இருந்தார்கள். இப்போது அதுவும் இல்லை. ஏறக்குறைய எல்லோரும் ஸ்டாலின் பக்கம் ஐக்கியமாகிவிட்டார்கள்.
திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கூட ‘உள்ளே வெளியே‘ என அழகிரியிடமும் ஸ்டாலினிடமும் நட்பு பாராட்டி வந்தார்கள். இப்போது அவர்களும் அழகிரி பக்கம் திரும்புவதில்லை.
மதுரை நகர் என்று பார்த்தால், முன்னாள் துணைமேயர் மன்னன், எம்.எல்.ராஜ், உதயகுமார், முபாரக் மந்திரி என (மக்களால் அறியப்பட்டவர்களில்) சிலர் மட்டுமே அழகிரி பக்கம் இருக்கிறார்கள். ஆதரவாளர்கள் சிலர் கட்சியை விட்டு நீக்கப் பட்டிருக்கிறார்கள்.
‘விஜயகாந்த்துடனான கூட்டணிக்காகவே அண்ணன் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்’ என்று சொல்லும் அழகிரியின் ஆதரவாளர்களும் உண்டு. ‘2001-ல் மீண்டும் அழகிரியை தி.மு.க.வில் இணைத்தபோது அவருடன் இருந்த ஆதரவாளர்களுக்கு பதவிகள் கிடைத்தது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அழகிரியைச் சேர்த்துக்கொண்டாலும் அவரது ஆதரவாளர்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்பது தான் நிஜம். அதில் ஸ்டாலின் தெளிவாகவே இருப்பார்’ என்கிறார்கள் கட்சியில் காலம்காலமாய் இருப்பவர்கள்.
பிப்ரவரி, 2014.